Monday, November 22, 2010

படிக்க தவறிய நண்பர்களுக்கு- "2008ல் ஜெயமோகனின் வலைப்பூ பரபரப்பு"

”ஜெயமோகன் ப்ளாக் எழுதுறாரே… படிச்சீங்களா?”

எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பூ தான் இலக்கிய வட்டாரத்தின் சமீபத்திய பரபரப்பு. சர்ச்சைக்கும் ஜெயமோகனுக்கும் அப்படி ஒரு பந்தம். ‘கருணாநிதி இலக்கிய வாதியே இல்லை!’ என்பது தொடங்கி, ‘பெரியார், தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாதவர்!’ என்பது வரை ஜெயமோகனின் தடாலடி ஸ்டேட்மென்ட்கள் பிரபலமானவை. ‘இனிமேல் எழுதுவதில்லை’ என அறிவித்துவிட்டுக் கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்த ஜெயமோகன், வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்ததும் வெடிக்கத் தொடங்கிவிட்டது சர்ச்சை சரவெடி!

கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற சக இலக்கிய வாதிகள் தொடங்கி பெரியார், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பிரபலங்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை ஜெயமோகன்.

‘என் தலைமுறையின் நோக்கில் அவர் (பெரியார்) சமூக இயக்கத்தின் உட்சிக்கல்களையும், மனித மனத்தின் ஆழத்தையும், அதில் மரபு ஆற்றும் பங்கையும் உணராத பாமரர்தான். இன்றும் ஈ.வே.ரா. பற்றி எனக்குச் சாதாரணமான ஒரு மரியாதை மட்டுமே உள்ளது…’, ‘அவருக்குச் சமூகச் சீர்திருத்த நோக்கம் இருந்தது என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், அவரை நான் ஒரு சிந்தனையாளராகவோ, அறிஞராகவோ, எண்ணவில்லை. தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாத அவரை தமிழ்ப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் தீர்மானிக்கும் ‘நபி’ போல சித்திரிக்கும் இன்றைய போக்குகள் மிக ஆபத்தானவை’ என்றெல்லாம் பெரியார் பற்றி போகிற போக்கில் இவர் உதிர்க்கும் விமர்சனங்கள் வலைப்பூ முழுக்க விரவிக்கிடக்கின்றன.

எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் தனித் தனிப் பதிவுகள். எம்.ஜி.ஆருக்குத் ‘தொப்பி’, சிவாஜிக்குத் ‘திலகம்’ என்ற தலைப்புகளுடன். ‘அப்படி இவருக்கு அந்த இரண்டு சகாப் தங்களின் மீது என்னதான் பகை?’ என்று படிப்பவர்கள் குமுறிக் கொந்தளிக்கும் அள வுக்கு வயது, உடல் நலப் பாதிப்பு ஆகியவற்றைக்கூட விடாப் பிடியாகக் கிண்டலடிக்கிறது ஜெயமோகனின் எழுத்துக்கள். அதிலிருந்து சில பகுதிகள் மட்டும் நாம் எடைபோட…

‘தொப்பி’

‘எங்களூரில் காந்தாராவ், கிருஷ்ணா போன்ற தெலுங்கு நடிகர்களுக்குத்தான் செல்வாக்கு. குலசேகரத்தில் இரண்டே தியேட்டர்கள்; ஒன்றில் மலையாளப் படம் என்பதால், எம்.ஜி.ஆர். வேறு வழியில்லாமல் ரசிக்கப்பட்டார். செல்லப் பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின் மீது பச்சைப் பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்க ளூரில் பரவலாக நம்பப்பட்டது. ஆகவே, பச்சைப் பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்தில்இருந்தது.

அவர் இரு லேகியங்களைத் தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று, தங்க பஸ்பம்; நிறம் மங்காமல்இருப்பதற்காக. இன்னொன்று, சிட்டுக்குருவி லேகியம்; வீரியத்துக்காக! ஆண் சிட்டுக் குருவிகள் எந் நேரமும் பெண் புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண் சிட்டுக் குருவிகளைக்கொண்டு செய்யப்படும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிடுவதால், எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக் குருவிகளை விரட்ட தலைக்கு மேல் வலையைக் கட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.

லேகியத்தின் பலன்களை நாம் சினிமாவிலும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். காதல் காட்சிகளில் மூன்று வகை நடிப்புகளை வெளிப் படுத்துவார். நெளிந்து நின்று கீழு தட்டைக் கடித்து அரைப் புன்னகை யுடன் மேலும் கீழும் பார்ப்பது… கதாநாயகியின் பின்னால் வந்து நின்று அவள் இரு புஜங்களிலும் பிடித்து சரேலென்று ஒரு பக்கமாக விலக்கி கேமராவைப் பார்த்து உதட்டைச் சுழிப்பது. இடையை ஒசித்து ஒசித்துச் செல்லும் (ஷாட் முடிந்த பின் சரோஜாதேவிக்கு இடுப்பில் எண்ணெய் போட்டு சுளுக்கு எடுப்பார்களாமே!) கதா நாயகிக்குப் பின்னால் துள்ளி ஓடுவது… இதைத் தவிரவும் பல சிட்டுக் குருவித்தனங்கள்!

எம்.ஜி.ஆர். தமிழ்ப் பண்பாடு தவறுவதில்லை. (இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை) பாட்டில் கதாநாயகியைப் புல் தரையிலும் மணலிலும் போட்டு புரட்டி எடுத்து, மெல்லிசான சேலை உடுத்திருந்தாளென்றால் மழையில் நனையவைத்து, கேமரா பக்கவாட்டில் இருக்கிற தென்றால் முந்தானையைப் பிடித்து இழுத்து, உதட்டைக் கடித்தபடி பின்னால் துள்ளி ஓடி இடை பிடித்து இழுத்து அணைத்து, அவள் கால்கள் நடுவே காலை நுழைத்து ராமன் வில்லை வளைப்பது போல வளைத்து, அவளைப் பூச்செடி களுக்குப் பின்னால் இட்டுச் சென்று, இரு பூக்களை ஒன்றோ டொன்று உரசவைத்து, பாறை மேல் படுக்கவைத்து, மேலேறிப் படுத்து நாஸ்தி செய்தாலும், பாட்டு இல்லாதபோது பண்பாக ‘அதெல்லாம் கையானத்துக்கு அப்பம். நீ இப்ப வீத்துக்கு போ!’ என்றுதானே அவர் சொல்கிறார்.

எம்.ஜி.ஆர். படத்தில் பாடல்கள் அர்த்தமுள்ளவை. ‘ஆண்ட வன் உலகத்தின் முதலாளி… அவனுக்கு நானொரு தொழி லாளி!’ அப்படியென்றால் ஏமாற்றலாம். கூலி கேட்டு வையலாம். போஸ்டர் ஒட்டி நாறடிக்கலாம். இது இப்போ தைய சிந்தை. அன்றெல்லாம் பாட்டு புரிவதில்லை. ‘தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…’ காஞ்சி என்றால் என்ன? தொடுவட்டியில் வாங்கின சாணித்தாள் பாட்டுப் புத்தகத்தில் பொதுவாகப் பிழைகள் அதிகம். ஆகவே, உள்ளூர் தமிழறிஞரான நான் அதைக் ‘கஞ்சியிலே’ என்று திருத்தினேன். அப்படியானால் ‘படித்தேன்’ தவறுதானே? குடித்தேன் என்று ஆக்கியபோது, சுமாராக வந்தது. தேவாசீர்வாதம் புலவர், ”அது செரிதேண்டே மக்கா..! கஞ்சித் தலைவன்னுகூட ஒரு பழைய படம் வந்திட்டுண்டு. ஏழைகளுக்கு அமிருதம்லா கஞ்சி? பதார்த்தகுண சிந்தாமணியிலே என்ன சொல்லியுருக்குண்ணாக்க…” என்றார்.

எம்.ஜி.யாரின் பேச்சு வேறு எங்களுக்குப் புரிவதில்லை. தீப்பொறி ஆறுமுகம் மேடையில் சொல்லும் நகைச்சுவை ஒன்று உண்டு. ஆசிரியர்கள் போராட்டம் நடந்தபோது, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த எம்.ஜி.ஆர். சொன்னாராம்… ‘உங்களுக்கெல்லாம் பைப்பு இருக்கு. பம்பு இல்லை.’ ஆசிரியர்கள் திக்பிரமை அடித்துப்போய், பேச்சுவார்த்தை முறிந்தே போயிற்று. தலைவர் சொன்னது, ‘படிப்பு இருக்கிறது, பண்பு இல்லை’ என்று. அதேபோல காதல் வசனங்கள்… ”கமலா, நீ என்னைத் தப்பா புழிஞ்சுக்கிட்டே (அடிப்பாவி) என்னைக் கயமை அய்க்குது. எங்கம்மாவுக்கு நான் ஒரு சத்தியம் செஞ்சு குதித்திருக்கேன்.” பொன்மொழிகளும் சிக்க லானவை… ‘தேய்ஞ்சு செஞ்சா தவழு. தேயாம செஞ்சா தப்பு!’ தப்புக்கு தவழ வேண்டாம், பெஞ்சு மேல் ஏறினால் போதுமா? ‘அம்மா அப்பி சொல்லாதீங்கம்மா! தை செஞ்சு அப்பி சொல்லாதீங்க. உங்க மகன் ஒருநாளும் அப்பி செய்ய மாட்டான்.’ எங்களூரில் அப்பி என் றால், சின்னப்பிள்ளை கொல்லைக் குப் போவது என்றொரு பொருள் உண்டு.

ஆனால், ஒரு ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. இருபதாண்டுகளுக் குப் பின்னால் என்னால் இப்போது ஒரு பழந்தமிழ்ப் படத்தைக்கூடப் பத்து நிமிடம் பார்க்க முடியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். படங்களை பெரும்பாலும் கடைசி வரை பார்க்க முடிகிறது, அம்புலிமாமா கதை படிக்கும் ஆர்வத்துடன்! திரைக்கதை பற்றிக் கற்ற பின், இந்த இரண்டாண்டுகளில் கச்சிதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்ட படங்கள் என்று கணிசமான எம்.ஜி.ஆர். படங்களைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது. தமிழில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த வணிகத் திரைக்கதை ‘எங்க வீட்டுப் பிள்ளை’ தான்!’

‘திலகம்’

‘…சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்துப் பிறருக்குப் பிடிக்காது. வேறு யாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். பொதுவாக முக்கியக் கட்டங்களில் பாடித் தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். தங்கை கல்யாணமாகிப் போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீறிட அவர் பாடுவார். நெஞ்சடைக்கப் பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதே கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.

சிவாஜி படங்களின் நகைச் சுவையின் உச்சம் சண்டைக் காட்சிகள்தான். ‘அவன்தான் மனிதன்’ என்ற படத்தில் அவர் சண்டைக் காட்சியில் நடித்த போது, நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டிப் பின்னால் இழுப்பார். ‘வைக்கோலு பிடுங்கு கான்’ என்று அப்பி தாமோதரன் சொல்ல, அது சிவாஜி பட சண்டைக்கான சொல் ஆகியது. ‘சுண்டன் படம் எப்பிடி மச்சினா? நாலு வைக்கோலு இருக்குலே… அதுகொள்ளாம், சிரிக்கவகையுண்டு! பின்ன கடசீ ஸீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கினயும் மனசு தெறந்து சிரிக்கிலாம். ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?’…

உச்சம் ‘திரிசூலம்’. அதில் மூன்று நடிப்பு. இரு கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவை. கிழ சிவாஜிக்குப் பக்கவாட்டில் பார்த்தால் தலைகீழ் தேங்காய்மூடி போலத் தெரியும் தாடி. அவர் கே.ஆர்.விஜயாவை பிரிந்திருப்பார். பிரிவுத் துயர் தாங்காமல் தினம் இரண்டு லார்ஜ் ஏற்றிக்கொண்டு (சிவாஜி காங்கிரஸ்காரர் ஆதலினால் படத்தில் இக்காட்சியைக் காட்ட மாட்டார்கள். ஊகம்தான்!) சாட்டையால் தன்னைத்தானே பளார் பளார் என அடிப்பார். அப்போது எதிர் பார்க்கப்படுவது போலவே உதடுகள் துடிக்கும், கன்னம் அதிரும்…

உச்சகட்ட நடிப்பு… ‘பகைவர் களே ஓடுங்கள், புலிகள் இரண்டு வருகின்றன…’ என்ற வரிக்கு சின்ன சிவாஜி காட்டும் சைகைதான். தமிழ் நடிப்புலகில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. ‘தென்னாட்டு மார்லன் பிராண்டோ’ என்று சிவாஜியை இதன் பொருட்டே சொன்னார்கள் என்று நினைக்கிறேன்.’

நம் குறிப்பு: தமிழ் வலைப் பூக்களில் இரண்டு பக்கங்கள் உள்ளன. நல்ல கதை, கவிதைகள், ஆரோக்கியமான விவாதங்கள் ஒரு பக்கம்; பெயரை மறைத்துக்கொண்டு எழுதும் வசதி, கட்டற்ற சுதந்திரம், சென்ஸார் இல்லாதது போன்றவற்றால் எதை வேண்டுமானாலும் மனம் போன போக்கில் எழுதலாம் என்ற பொறுப்பின்மை இன்னொரு பக்கம். இந்த இரண்டாம் பக்கத்தில் ஒரு பொறுப்பான எழுத்தாளர் தன் அடையாளங்களைச் சொல்லி… அதே சமயம் தன் ஆவேசத்தை நியாயப்படுத்தக் காரணங்களும் சொல்லாமல் இப்படி சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்திருப்பதை என்னவென்று சொல்வது?

நன்றி ஆனந்தவிகடன்.

இதற்கு ஆனந்தவிகடன் அவதூறு என்று ஜெயமோகன் எழுதியது. கீழே

———————————

ஆனந்தவிகடனின் அவதூறு

ஆனந்த விகடன்இந்தவார இதழில் அட்டைப்பட முக்கியத்துவமளித்து என் இணையதளம் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது.’ எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் ஆகியோரை ஜெயமோகன் இழிவுபடுத்துகிறாரா?’ என்ற தலைப்புடன். ஊரெங்கும் சுவரொட்டிகள் வேறு.

இந்த இணையதளத்தைப் படிப்பவர்களுக்கு தெரியும் இதன் நகைச்சுவைப்பகுதியில் அப்படி இழிவுபடுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று. என் சாதி ,மதம் ,தெய்வங்கள், என் குடும்பம், சிற்றிதழ்கள், மதிப்பிற்குரிய இலக்கிய மூதாதையர் , என் வணக்கத்திற்குரிய இலக்கிய ஆசிரியர்கள் ஆகிய அனைத்தையுமே வேடிக்கையாக அணுகும் பகுதி இது. இன்றைய இலக்கியத்தில் இத்தகைய பகடி மிக முக்கியமான ஒரு அம்சம்.

இதில் சில பகுதிகளை மட்டும் பெயர்த்தெடுத்து உள்நோக்கம் கற்பித்து நுண்ணுணர்வோ நகைச்சுவையுணர்வோ இல்லாத கும்பலை வன்முறை நோக்கி தூண்டி விடும்படியாக ஆனந்த விகடன்வெளியிட்டுள்ள இந்த கட்டுரை சற்று எதிர்பாராத ஒன்று. விகடன் பொதுவாக இம்மாதிரி சிண்டுமுடியும் வேலைகளைச் செய்வதில்லை. இதன் பின்னால் வன்மம் கொண்ட நோக்கம் உள்ளது

ஆனால் எதிர்பார்க்கத்தக்க விஷயம், கருத்துச் சுதந்திரம், புனித பிம்பங்களை கட்டுடைத்தல், அங்கதம் என்றெல்லாம் பேசி வரும் தமிழ் சிற்றிதழாளர்களிடமிருந்து சிறு எதிர்ப்போ கண்டனமோகூட இம்மாதிரி ஒரு வெளிப்படையான தூண்டிவிடுதலுக்கு எதிராக கிளம்பாது என்பது. வன்முறை நிகழ்ந்தால்கூட அதைக் கொண்டாடவே செய்வார்கள்

முற்றிலும் எதிர்பார்க்க முடியாத விஷயம் விகடன் என் மறுப்பை பிரசுரிக்கும் என்பது. பிரசுரித்தால்கூட ஒருசில சம்பந்தமில்லாத வரிகளை படத்துடன் அச்சிட்டு வைப்பார்கள்

ஆகவே விகடனுக்கு நான் அனுப்பிய கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.

மதிப்பிற்குரிய ஆனந்த விகடன்ஆசிரியருக்கு

விகடன் பெப் 14-21 இதழில் என் இணையதளம் பற்றி வெளியாகியிருக்கும் கட்டுரை படித்தேன்.

என் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கட்டுரைகளில் நமது பண்பாட்டுக்கூறுகள் அனைத்தையுமே அங்கதமாக விமரிசனம் செய்திருக்கிறேன். என் இலக்கிய ஆசிரியர்கள், தீவிர இலக்கியம், இலக்கிய முன்னோடிகள், சக படைபபளிகள், என் சாதி, மதம், குடும்பம் என எதுவுமே அதிலிருந்து தப்பவில்லை– அப்படித்தான் திரைப்படமும். இது இன்றைய எழுத்தின் ஒரு இயல்பாகும். இன்று இந்த அம்சம் திரைபபடங்கள் வரை வந்துள்ளது– இந்திப்படமான ‘ஓம் சாந்தி ஓம்’ ஓர் உதாரணம். அது அங்கே ஒரு மாபெரும் வெற்றிபப்டம்.

இதை எதையுமே பொருட்படுத்தாமல் சில பகுதிகளை பிய்த்துப்போட்டு உள்நோக்கம் கற்பித்து எழுதபப்ட்டுள்ள தங்கள் கட்டுரை. வன்முறையை தூண்டும் உள்நோக்கம் கொண்டது. ஆபத்தானது.

கருத்து சுதந்திரத்துக்காக சிறைசென்ற வரலாறுள்ள ஆசியரைக் கொண்டிருந்த ஓர் இதழ் இதைச்ச்செய்திருப்பதை எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை

அன்புடன்

ஜெயமோகன்

1 comment:

  1. இதை இரண்டு ஆண்டுகள் கழித்து புதுப்பிப்பது எதற்கு என்று தெரியவில்லை. என்னளவில் இதை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டேன். சிரிக்கக்கூடிய நகைச்சுவை. சில தமிழ்ப்படங்களில் இடம்பெறுவதுபோல அழுது வடியாத நகைச்சுவை.

    ReplyDelete